முக்கிய செய்திகள்

புதுடெல்லி,

இந்தியாவில் 5 கோடியே 40 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை என புள்ளி விவரம் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

போலி ஓட்டுனர் உரிமங்கள்
நமது நாட்டில் 18 கோடி ஓட்டுனர் உரிமங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தொகுத்துள்ளது. அதில் 5 கோடியே 40 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் போலி என தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக அந்த துறைக்கான மத்திய மந்திரி நிதின் கட்காரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் 30 சதவீத ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை. அவற்றை சோதிக்க வேண்டி உள்ளது. ஓட்டுனர் உரிமங்கள் பெறுவதற்காக ஆன்லைன் வழியிலான சோதனை முறைகளை கொண்டு வரப்போகிறோம். ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்றால் அவர் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி, பிரபலமாக இருந்தாலும் சரி, அந்த ஆன்லைன் சோதனையை எதிர்கொண்டாக வேண்டும். அதில் ஒளிவுமறைவற்ற தன்மை வந்து விடும்.

மசோதா

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றுவோம். இது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பட்டியலில் உள்ளதால் மாநிலங்களின் ஒருமித்த கருத்துடன் மசோதா நிறைவேற்றப்படும். இந்த மசோதா, இந்திய சாலைகளை பாதுகாப்பான சாலைகளாக்குவதில் முக்கிய பங்காற்றும்.வெளிப்படையான தன்மையையும், கணினி மயமாக்கலையும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உள்ள சில சுய நல சக்திகள் எதிர்ப்பதால், இந்த மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது.  ஆயிரம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி

ஆர்.டி.ஓ. அலுவலகங்களை கணினி மயமாக்குவதுடன், 5 ஆயிரம் புதிய ஓட்டுனர் பயிற்சி மையங்களை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
சாலை போக்குவரத்து தொடர்பாக ராஜஸ்தான் மாநில போக்குவரத்து மந்திரி யூனூஸ்கான் தலைமையில் அமைக்கப்பட்ட மந்திரிகள் குழு, தனது முதல் கட்ட அறிக்கையை அளித்துள்ளது. அதில் போக்குவரத்து விதி மீறலுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அந்த குழுவின் இறுதி அறிக்கை அளிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஓராண்டு சிறை
மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் ஒருவர் தகுதி இழந்த பின்னர் வாகனம் ஓட்டினால் அல்லது தகுதி இழப்பு பற்றிய உண்மையை சொல்லாமல் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தால் அல்லது பெற்றால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்க மந்திரிகள் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறார் ஒருவர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவரது பாதுகாவலருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கவும், வாகனத்தின் பதிவை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

போலி ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டி ஒருவர் பிடிபட்டால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

Tags:

No Comment to " இந்தியாவில் 5 கோடியே 40 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை "