முக்கிய செய்திகள்

Latest Posts

எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு திடீர் தீ

- Monday, May 30, 2016 No Comments
கிருஷ்ணராயபுரம் : கரூர் அருகே பாசஞ்சர் ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பக்கத்து பெட்டிக்கு  ஓடி உயிர் தப்பினர். கரூரிலிருந்து  திருச்சிக்கு நேற்று காலை 6.50  மணிக்கு பாசஞ்சர் ரயில் 300 பயணிகளுடன் புறப்பட்டது. 6.55 மணியளவில்  பசுபதிபாளையத்தை தாண்டியபோது ரயிலின் இன்ஜினுக்கு அருகில்  இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் ஜங்ஷன் பாக்சில் இருந்து திடீரென புகை வர  தொடங்கியது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள்  மூச்சுவிட முடியாமல் திணறினர். வீரராக்கியம் நெருங்கியபோது பெட்டியில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அந்த பெட்டியிலிருந்த  15 பயணிகள் அலறி  அடித்துக்கொண்டு அடுத்த பெட்டிக்கு ஓடினர்.  7.05 மணியளவில்  வீரராக்கியம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். தகவல் அறிந்து  தீயணைப்பு வீரர்கள் விரைந்து  வந்து அந்த பெட்டியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.   எனினும் மேல் பகுதியில் இருந்த மின் விசிறி, பயணிகளின்  இருக்கைகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

இதன்பிறகு, கரூரிலிருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு  ரயிலில் பொருத்தப்பட்டது. பின்னர் இன்ஜின்  மெக்கானிக்குகள் ரயிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, ரயிலை மீண்டும் இயக்கலாம்  என தெரிவித்தனர். இதனால், வீரராக்கியம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.25  மணிக்கு பயணிகள் யாரும் இல்லாமல், திருச்சிக்கு அந்த ரயில் புறப்பட்டு சென்றது. தீயில் சேதமடைந்த  பெட்டி கழற்றப்படாமல், ரயிலுடனே சென்றது.   ரயிலில் வந்த பயணிகள், பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா என்பது பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்தது என்ன? பயணிகள் பேட்டி

தீ விபத்து குறித்து ரயிலில் வந்த பயணி முத்துசாமி கூறுகையில், ‘மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில், புகை வருவது போலவே இருந்தது. தொடர்ந்து, மூச்சடைத்தது. ரயில் வீரராக்கியத்தில் நின்ற பிறகுதான் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது’ என்றார். கனகவள்ளி கூறுகையில், ‘கரூரில் இருந்து ரங்கத்துக்கு செல்ல குடும்பத்துடன் வந்தோம். ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென நின்றது. அடுத்தடுத்து பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் சத்தம் போட்டுக் கொண்டே ரயிலை விட்டு இறங்கி ஓடினர். இதனால் நாங்களும் இறங்கி பார்த்தபோதுதான் தீ விபத்து தெரியவந்தது’ என்றார்.

எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு திடீர் தீ


ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலைய, கோச்சிங் யார்டில் பெங்களூருவில் இருந்து வந்த சொர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் சொர்ணா ரயில் இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பயங்கரமாக எரியத் தொடங்கியது. வீரர்கள் வந்து சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க எரிந்த ரயிலில் உள்ள பெட்டிகளை துண்டித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இடி, மின்னலால், உயர் அழுத்த மின்கம்பியில் மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என்றனர். ஆனாலும், இதில் ஏதாவது நாச வேலையாக இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூருக்கு செல்லவேண்டிய சொர்ணா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

கர்நாடகாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் 45 அதிவிரைவு படை அமைத்து கண்காணிப்பு

- No Comments
நாமக்கல்,
கர்நாடகாவில் பறவை காய்ச்சகோழிகளை தாக்கி இருப்பதை தொடர்ந்து நாமக்கல்லில் கால்நடை துறையினர் 45 அதிவிரைவு படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
பறவைக்காய்ச்சல் கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக அனைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்களும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள், கோழிகள், கோழி முட்டைகள், வாத்துகள், வாத்து முட்டைகள், வாத்துக்குஞ்சுகள், கோழித்தீவனங்கள் போன்றவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் பண்ணையின் நுழைவு வாயிலில் கிடங்கு அமைத்து அதில் குளோரின் டைஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைப்பதோடு, உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. கோழிப்பண்ணையினுள் நுழையும் வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே, பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
அதிவிரைவு படை மேலும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 45 அதிவிரைவு படை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கோழிப்பண்ணைகளை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் சுமார் 1,100 முட்டையின கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேல் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் மாதந்தோறும் 20 ஆயிரம் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அது மேலும் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் கோழிகளை தாக்கி உள்ளதால், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டை 20 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருங்காலங்களில் முட்டை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதிவேக ரயில்களை இயக்கும் ரயில்வே முயற்சி 'டால்கோ' ரயிலை 115 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை

- No Comments
புதுடில்லி:உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த, 'டால்கோ' நிறுவனம் தயாரித்துள்ள ரயில், அதிகபட்சமாக மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் இயக்கி, சோதிக்கப்பட்டது.
புதுடில்லி:உலகின் மிகப்பெரிய ரயில்வே துறைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினைச் சேர்ந்த, 'டால்கோ' நிறுவனம் தயாரித்துள்ள ரயில், அதிகபட்சமாக மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் இயக்கி, சோதிக்கப்பட்டது.
சாதகமான அம்சங்கள்:இதற்காக, இந்த

மார்க்கத்தில், ரயில் பாதைகள் வலுப்படுத்தப்பட்டன; சிக்னல்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதுபோன்ற சில மேம்பாட்டு பணிகளுக்குப் பின், இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.அதே நேரத்தில், தற்போது உள்ள ரயில் பாதைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யாமல், அதிவிரைவு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்களின் வேகத்தை உயர்த்துவதால், பயண நேரம் குறைவதுடன், எரிபொருள் சேமிப்பு உட்பட, பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன.
அதன்படி, மத்திய அரசின் இந்த முயற்சிக்கு உதவ, ஸ்பெயினைச் சேர்ந்த, டால்கோநிறுவனம் முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள, எடை குறைவான ரயில் இன்ஜின் மற்றும் ஒன்பது பெட்டிகள், இலவசமாக இந்திய ரயில்வேக்கு வழங்கப்பட்டு உள்ளன.
முதல்கட்டம்...இந்த ரயிலின் இயக்க செயல்பாடுகள் குறித்த முதற்கட்ட சோதனை நேற்று நடந்தது. உத்தர பிரதேச மாநிலத்தில், 90 கி.மீ., துாரமுள்ள பரேலி - மொராதாபாத் இடையே, இந்த ரயில் நேற்று இயக்கப்பட்டது. அதிகபட்சம், மணிக்கு, 115 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில், 70 நிமிடங்களில் பயண துாரத்தை கடந்தது.தற்போது, டில்லி - மும்பை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், சராசரியாக, மணிக்கு, 85 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

சிறப்பம்சம்:இந்த எடை குறைந்த டால்கோ ரயில் மூலம், பயண நேரம் வெகுவாக குறைகிறதுஎரிபொருள் தேவையில், 30 சதவீதம்
Advertisement
குறையும்வளைவுகளில் வேகத்தை குறைக்காமல்இயக்கலாம்இந்த ரயில் மூலம், டில்லி - மும்பை இடையேயான, பயண நேரம், 17 மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரமாக குறையும்.
மூன்று கட்ட சோதனைகள்::பரேலி - மொராதாபாத் இடையே, டால்கோ ரயில், தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இயக்கி சோதிக்கப்படும். காலியான பெட்டிகளுடனும், மணல் மூட்டைகள் நிரப்பப்பட்டும்,

இந்த ரயில் சோதித்து பார்க்கப்படும்.ரயிலின் வேகத்துக்கு முக்கியத்துவம் தரப்படும் அதே நேரத்தில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், அலுப்பு இல்லாமல் பயணிகளுக்கு சொகுசான பயணம் கிடைப்பது குறித்தும்

இந்த சோதனை யின் போது முக்கியத்துவம் தரப்படும்.முதல் கட்ட சோதனையைத் தொடர்ந்து, மதுரா - பால்வால் இடையே, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் பாதையில், டால்கோ ரயில் சோதித்து பார்க்கப்படும். அதிகபட்சம், மணிக்கு, 180 கி.மீ., வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. அங்கு தொடர்ந்து, 40 நாட்களுக்கு இந்த சோதனை நடக்கும்.
அதைத் தொடர்ந்து, டில்லி - மும்பை இடையே மூன்றாம் கட்ட சோதனை, இரு வாரங்களுக்கு நடக்கும்.இதுபோன்று, மேலும் மூன்று சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும்.

அதன் பின், இந்த ரயிலின் செயல்பாடு குறித்து முடிவு செய்யப்படும். முதல் சோதனை ஓட்டம், மிகவும் சொகுசாக இருந்தது.- ரயில்வே அதிகாரிகள்

மர்மமான முறையில் இறந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது தடயவியல் அறிக்கையால் புதிய திருப்பம்

- No Comments
கொச்சி,
மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

கலாபவன் மணி மரணம்
தமிழ், மலையாள சினிமா உலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் கலாபவன் மணி (வயது 45) கடந்த மார்ச் 6-ந்தேதி திடீரென மரணமடைந்தார். கல்லீரல் பிரச்சினை காரணமாக ஆபத்தான நிலையில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

சம்பவத்துக்கு முன்தினம் தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால்தான் கலாபவன் மணி இறந்ததாக தகவல் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் அவரது நண்பர்களான நடிகர் ஜாபர், ஷாபு உள்பட சிலர் கலந்து கொண்டனர்.

மர்மம் நீடிப்பு

பின்னர் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது உடலில் பூச்சி மருந்து இருந்ததாகவும், மெத்தில் ஆல்கஹால் எனப்படும் மெத்தனால் இருந்ததாகவும் இருவேறு தகவல்கள் வெளியானது. இதனால் கலாபவன் மணியின் சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்தது.
எனவே கலாபவன் மணியின் உடல் பாகங்களை தடயவியல் சோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு கலாபவன் மணியின் உடல் பாகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இதற்கிடையே கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். எனவே இந்த மர்மச்சாவு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாபவன் மணியுடன் மது அருந்தியவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் இந்த வழக்கில் போலீசாருக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணை மந்தமடைந்தது.

நச்சுப்பொருள்
இந்த நிலையில் ஐதராபாத் தடயவியல் துறை கலாபவன் மணியின் உடல்கூறு சோதனை முடிவுகளை வெளியிட்டு உள்ளது. அதில் கலாபவன் மணியின் உடலில் மெத்தில் ஆல்கஹால் எனப்படும் நச்சு கலந்த மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

கள்ளச்சாராயம் எனப்படும் போலி மதுவில் போதைக்காக சேர்க்கப்படும் இந்த மெத்தனால் நச்சுப்பொருள் ஆகும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் இது எடுத்துக்கொண்டால் கண் பார்வை இழப்பு மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படும். அப்படித்தான் கலாபவன் மணியின் உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளதாக தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.

புதிய திருப்பம்
தடயவியல் துறையின் இந்த அறிக்கையால் கலாபவன் மணியின் சாவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கலாபவன் மணிக்கு நச்சு கலந்த அந்த மதுவை கொடுத்தது யார்? என போலீசார் விசாரணையை முடுக்கி விட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 5 கோடியே 40 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை

- No Comments
புதுடெல்லி,

இந்தியாவில் 5 கோடியே 40 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை என புள்ளி விவரம் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

போலி ஓட்டுனர் உரிமங்கள்
நமது நாட்டில் 18 கோடி ஓட்டுனர் உரிமங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தொகுத்துள்ளது. அதில் 5 கோடியே 40 லட்சம் ஓட்டுனர் உரிமங்கள் போலி என தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக அந்த துறைக்கான மத்திய மந்திரி நிதின் கட்காரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் 30 சதவீத ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை. அவற்றை சோதிக்க வேண்டி உள்ளது. ஓட்டுனர் உரிமங்கள் பெறுவதற்காக ஆன்லைன் வழியிலான சோதனை முறைகளை கொண்டு வரப்போகிறோம். ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்றால் அவர் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி, பிரபலமாக இருந்தாலும் சரி, அந்த ஆன்லைன் சோதனையை எதிர்கொண்டாக வேண்டும். அதில் ஒளிவுமறைவற்ற தன்மை வந்து விடும்.

மசோதா

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றுவோம். இது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பட்டியலில் உள்ளதால் மாநிலங்களின் ஒருமித்த கருத்துடன் மசோதா நிறைவேற்றப்படும். இந்த மசோதா, இந்திய சாலைகளை பாதுகாப்பான சாலைகளாக்குவதில் முக்கிய பங்காற்றும்.வெளிப்படையான தன்மையையும், கணினி மயமாக்கலையும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உள்ள சில சுய நல சக்திகள் எதிர்ப்பதால், இந்த மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது.  ஆயிரம் ஓட்டுனர் பயிற்சி பள்ளி

ஆர்.டி.ஓ. அலுவலகங்களை கணினி மயமாக்குவதுடன், 5 ஆயிரம் புதிய ஓட்டுனர் பயிற்சி மையங்களை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
சாலை போக்குவரத்து தொடர்பாக ராஜஸ்தான் மாநில போக்குவரத்து மந்திரி யூனூஸ்கான் தலைமையில் அமைக்கப்பட்ட மந்திரிகள் குழு, தனது முதல் கட்ட அறிக்கையை அளித்துள்ளது. அதில் போக்குவரத்து விதி மீறலுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அந்த குழுவின் இறுதி அறிக்கை அளிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஓராண்டு சிறை
மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் ஒருவர் தகுதி இழந்த பின்னர் வாகனம் ஓட்டினால் அல்லது தகுதி இழப்பு பற்றிய உண்மையை சொல்லாமல் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தால் அல்லது பெற்றால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்க மந்திரிகள் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறார் ஒருவர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவரது பாதுகாவலருக்கு 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கவும், வாகனத்தின் பதிவை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

போலி ஓட்டுனர் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டி ஒருவர் பிடிபட்டால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

மாயமான வேந்தர் மூவீஸ் மதன்: கடிதத்தால் பரபரப்பு

- No Comments
வேந்தர் மூவீஸ் பட அதிபர் மதன், தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.வேந்தர் மூவீஸ் பட அதிபர் மதன். இந்நிறுவனம் சினிமா தயாரித்ததோடு, வினியோகத்திலும் ஈடுபட்டது. இப்பட நிறுவனம், நடிகர் ஆதி நடித்த, 'அரவான்' படத்தை முதலில் வெளியிட்டது. பின், ஐந்து படங்களுக்கு மேல் தயாரித்தும், 20 படங்களுக்கு மேல் வினியோகித்தும் உள்ளது.
தவிர, பிரபல கல்வி நிறுவன அதிபரும், ஐ.ஜே.கே., கட்சித் தலைவருமான பச்சமுத்துக்கு நெருக்கமாக இருந்தார். எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல விஷயங்களில், பச்சமுத்துக்கு வலது கரமாக மதன் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் மதனுக்கும், பச்சமுத்துக்கும் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து, மதன், 'காசி சென்று கங்கையில் சமாதி அடையப் போகிறேன்' என, கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இக்கடிதம், சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. கடிதம் குறித்த உண்மையை அறியும் முயற்சியில், தமிழ் திரையுலகினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

மதன் எழுதி வைத்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:என் நண்பர்களுக்கும், வேந்தருக்கும் மற்றும் என் குடும்பத்தாருக்கும்...ஒரு ஜீரோவில் தொடங்கி, ஒரு ஜீரோவில் முடிகிறது என் வாழ்க்கை. கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணமடைந்தால், அடுத்த ஜென்மம் இல்லை; எனக்கு, அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன்.

என்னிடம், மாணவர் சேர்க்கைக்காக பணம் தந்தவர்களும், என்னை நம்பி சினிமாவில் முதலீடு செய்தவர்களும் பயப்பட வேண்டாம்; பணம் பத்திரமாக உள்ளது. என் வாழ்வில், எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் - வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து, என்னை இந்த உலகுக்கு காட்டியவர் அவரே. என் தலைவருக்காக வாழ்ந்தேன்; தலைவனாலேயே போகிறேன்.

எஸ்.ஆர்.எம்., நிறுவனம், முதலில் வர வேண்டும் என பாடுபட்டேன். மாணவர்கள் கல்லுாரியில் செலுத்தும் பணம் குறைவாக இருந்தாலும், கல்லுாரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும்; இதெல்லாம் எப்படி? என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும் என்பது தான். தலைவர் எப்போதும் என்னை கூட வைத்து கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம்.
கல்லுாரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள். எல்லாம் நான் பட்ட உழைப்பு. கட்சி தொடங்கி முதல் மாநாட்டில், வெளி மாநில மாணவர்கள், 100 பஸ்களில் வந்து பங்கேற்றனர். பீகார் தேர்தல், 14 தொகுதியில், ஐ.ஜே.கே., நின்றது. கட்சிக்கான அனைத்து செலவையும் செய்தது நான் தான்; பொய் சொல்லவில்லை.

என்னையும், அய்யாவையும் சிலர் பிரிக்க நினைக்கின்றனர். சொத்தை, என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என, பில்லி சூனியம் வரையில் சென்று விட்டனர். எனக்கு அதை பற்றி கவலையில்லை. ஆனால், கடந்த ஆறு மாதமாக, வேந்தர் அய்யா என்னிடம் பேசுவது இல்லை; தேர்தல் பணிக்கும் அழைக்கவில்லை. அதனால், இந்த முடிவுக்கு செல்கிறேன். இது புதிது இல்லை. நவ., 30ம் தேதியும் முயற்சித்தேன்; முடியவில்லை.

கடைசியாக நான் கேட்பது என்னவென்றால், நான் அனுப்பிய லிஸ்ட் படியே மாணவர்களை கல்லுாரியில் சேர்க்க வேண்டும். அவர்களிடம் வாங்கி பணம் முழுமையாக தரப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் மேல் எந்த கடனும் வரக்கூடாது. இதையும் மீறி என் நண்பர்களையோ, என் குடும்பத்தினரையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார். அய்யா, நான் உங்களை பார்க்காமல் போகிறேன். என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.-

அமெரிக்காவில் நடந்த 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் 2 இந்திய சிறுவர்கள் சாம்பியன்

- No Comments
வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'நேஷனல் ஸ்பெல்லிங் பீ' போட்டி நடந்து வருகிறது. ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான எழுத்துக்களை கூறும் இந்த போட்டியில் பள்ளிச் சிறுவர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டி சற்று கடினமாகவே இருந்தது. இருந்தபோதிலும், சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய ஜெய்ராம் ஜகதீஷ் ஹாத்வார் (13), நிகார் சாய்ரெட்டி ஜங்கா (11) ஆகிய 2 இந்திய வம்சாவளி பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றிருப்பது இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்துள்ளது. இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலில் 10 பேரில் 7 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவர்களாவர்.  

பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் சாவு:4 பேர் காயம்

- No Comments
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில், மதுரையைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
மதுரை அருகே அச்சம்பத்தில் உள்ள தனியார் அமைப்பின் மூலம் பாலகிருஷ்ணன் என்பவர் தலைமையில் 63 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஒன்றி பெரியகுளம் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களைப் பார்வையிடச் சென்றனர். அவர்கள் மஞ்சளாறு அணை, கும்பக்கரை அருவி மற்றும் சோத்துப்பாறையைப் பார்வையிட்ட பின்னர், மாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சோத்துப்பாறை அருகே சென்றபோது உயர்அழுத்த மின் கம்பியில் சிக்கி இருந்த தென்னைமட்டை உரசியதில், பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த அச்சம்பத்தைச் சேர்ந்த முகேஷ் (15) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்செல்வம் (18) உள்ளிட்ட 44 பேர் காயமடைந்தனர். உடனே இவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் முகேஷும், கார்த்திக்செல்வமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த அஜய்பிரகாஷ், கிஷோர், மதியரசு, பாண்டி, கார்த்திகேயன், முத்துக்குமார், சதீஸ்குமார் ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் 37 பேர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வட்டாட்சியர் அலுவலகங்களில் இ- சேவை மையங்கள் இன்று செயல்படும்

- Sunday, May 29, 2016 No Comments

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ- சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பது:
பொதுமக்களின் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களிலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அரசு இ-சேவை மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.
அதேபோல் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேவையான வருவாய்த்துறைச் சான்றுகளைப் பெற அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது சேவை மையங்களும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் செயல்படும் எனக் கூறியுள்ளார்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்

- No Comments
ஊட்டி,
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தெரிவித்து உள்ளார்.
மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மலர் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை செயலாளர் டாக்டர் விஜயகுமார், எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூனன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பேசும் போது கூறியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தபோதிலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த பூங்காவை கண்டு ரசிக்க கடந்த ஆண்டு மட்டும் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இங்கு தாவரவியல் பாடங்களை படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வந்து செல்கின்றனர்.
2 ஆயிரம் தாவர இனங்கள் இந்த பூங்கா 22 ஹெக்டேர் பரப்பளவில், கடல்மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 2 ஆயிரம் தாவர இனங்கள் உள்ளன. கடந்த 1896–ம் ஆண்டு முதன்முதலாக மலர்கண்காட்சி நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டது.
கடந்த 1980–ம் ஆண்டு முதல் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இந்த மலர்கண்காட்சியை நடத்தி வருகிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் இன்று (நேற்று) தொடங்கிய கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிக பிரமாண்டமாக 1 லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலைய அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 ஆயிரத்து 500 மலர்களை கொண்டு சிட்டுக்குருவிகள் அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேயிலை பூங்கா விழாவில் கலெக்டர் சங்கர் பேசும் போது கூறியதாவது:–
கடந்த 1995–ம் ஆண்டு 100–வது மலர்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆசியா கண்டத்திலேயே சிறந்த ரோஜா பூங்காவை ஊட்டியில் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் ஊட்டி ரோஜா பூங்கா.
தொடர்ந்து காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா, கூடலூரில் வண்ணத்து பூச்சி பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி நீலகிரியில் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நீலகிரியில் அவர் சுற்றுலாவை மேம்படுத்தி உள்ளார். இந்த இயற்கை காட்சிகள் மற்றும் மலர்களை காண்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சாந்தி ஏ.ராமு, ஆர்.கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, வேளாண்மைத்துறை துணை இயக்குனர்கள் உமாராணி, சிவசுப்பிரமணியம், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண்மைத்துறை இயக்குனர் சித்ரசேனன் வரவேற்று பேசினார். முடிவில் இணை இயக்குனர் மணி நன்றி கூறினார்.

மீன்பிடி தடை காலம் முடிந்தது: நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றனர்

- No Comments
சென்னை:
தமிழ் நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்து மே 29-ந் தேதி வரை மீன்களின் இனப் பெருக்க காலம் என்பதால் 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருந்தது.இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்த தடை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இன்று நள்ளிரவில் கடலுக்குள் செல்ல உள்ளனர்.கடந்த 1½ மாதங்களாக வருமானம் இன்றி தவித்த நிலையில் மீன்பிடி தடை காலத்தில் உற்பத்தி அதிகரித்து அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் செவ்வாய் அல்லது புதன்கிழமை கரைக்கு திரும்புவார்கள்.இதற்காக காசிமேடு, ராமேசுவரம், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், கேன்கள், வலைகள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மீன்பிடி தடை காலம் காரணமாக கடந்த 1 மாதமாக மீன் வரத்து குறைந்திருந்ததால் விலை அதிகமாக இருந்தது. இன்று முதல் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்வதால் மீன் விலை 2 நாளில் குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்திய எல்லையை தாண்டி யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நிக்கி கல்ராணியைப்போல் கலகலப்பான கதாநாயகியை பார்த்தது இல்லை

- No Comments

சென்னை,
‘‘நான் 10 படங்களில் நடித்து விட்டேன். நிக்கி கல்ராணியைப்போல் ஒரு கலகலப்பான கதாநாயகியை பார்த்தில்லை’’ என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.

விஷ்ணு விஷால்

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘குள்ளநரிக்கூட்டம்,’ ‘நீர்ப்பறவை,’ ‘ஜீவா,’ ‘முண்டாசுப்பட்டி,’ ‘இன்று நேற்று நாளை’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் இவர், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். கதாநாயகனாக நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்தும் இருக்கிறார். 

இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். எழில் டைரக்டு செய்து இருக்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது, கதாநாயகன் விஷ்ணு விஷால் கூறியதாவது:-

10-வது படம்
‘‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,’ நான் நடித்துள்ள 10-வது படம். எனக்கு மட்டும்தான் பத்தாவது படம் என்று நினைத்தேன். டைரக்டர் எழில், இசையமைப்பாளர் சத்யா ஆகியோருக்கும் இது 10-வது படம் என்று பின்னர் தெரியவந்தது.

‘நீர்ப்பறவை’ படத்துக்குப்பின், நான் படங்களை தேர்வு செய்துதான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதேபோல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறேன். இந்த படத்தை முதலில் வேறு ஒருவர்தான் தயாரிப்பதாக இருந்தார். எதிர்பாராத விதமாக நானே தயாரிப்பாளராக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் நண்பர்கள் உதவியுடன் படத்தை தயாரித்து நடித்து இருக்கிறேன்.

நிக்கி கல்ராணி
நான் இதுவரை நந்திதா, சுனைனா, மியாஜார்ஜ், ஸ்ரீதிவ்யா என பல கதாநாயகிகளுடன் நடித்து விட்டேன். நிக்கி கல்ராணியைப்போல் கலகலப்பான-சுறுசுறுப்பான கதாநாயகியை பார்த்ததில்லை. பயங்கர சுறுசுறுப்பு. லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பார். முதல் படத்திலேயே பயமுறுத்திய அவர், பழகுவதற்கு நேர் மாறாக இருந்தார்.
இதுவரை தொடர்ந்து 3 வெற்றி படங்கள் கொடுத்து விட்டேன். தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.’’
இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.

சூரி
நடிகர்கள் சூரி, ரவிமரியா, நடிகை நிக்கி கல்ராணி, டைரக்டர் எழில், இசையமைப்பாளர் சத்யா ஆகியோரும் படத்தை பற்றி நிருபர்கள் மத்தியில் பேசினார்கள்.

சென்னை வந்த விமானத்தின் கழிவறையிலும், இருக்கை அடியிலும் தங்ககட்டிகள் கடத்தல்

- No Comments
ஆலந்தூர்,
தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை மற்றும் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3½ கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்காணித்தனர். விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக இறங்கி வந்த பயணிகளை சோதனை செய்தனர். ஆனால் எந்த பயணியிடமும் தங்கம் எதுவும் சிக்கவில்லை.
விமானத்தில் மர்ம பைகள்
இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு செல்ல வேண்டும். அந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இருந்த ஒரு இருக்கையின் அடியில் மர்ம பை ஒன்று கிடந்தது.
அதேபோல் விமானத்தின் கழிவறையிலும் ஒரு பை இருந்தது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு இருந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், உடனடியாக விமானத்துக்குள் ஏறி அந்த மர்ம பைகளை சோதனை செய்தனர்.
3½ கிலோ தங்கம் சிக்கியது
அதில் விமானத்தின் இருக்கைக்கு அடியில் இருந்த பையில் இருந்து அரை கிலோ எடை கொண்ட 5 தங்க கட்டிகளையும், கழிவறையில் கிடந்த பையில் இருந்து 100 கிராம் எடை கொண்ட 11 தங்க கட்டிகளையும் கைப்பற்றினார்கள். மொத்தம் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 600 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வந்த மர்ம ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருப்பதை அறிந்ததும் தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அந்த தங்கத்தை விமானத்தின் இருக்கை மற்றும் கழிவறையில் விட்டுச்சென்றனரா? அல்லது தாய்லாந்தில் இருந்து வந்த அந்த விமானம் டெல்லிக்கு செல்லும் என்பதை அறிந்து, உள்நாட்டு பயணியாக டெல்லி செல்லும் போது எடுத்துச் செல்லலாம் என அதை விட்டுச்சென்றனரா? என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விமானத்தில் தங்கத்தை மறைத்து வைத்து சென்ற பயணி யார்? என்பதை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

கடுமையான வெயில் தொடர்வதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க

- No Comments
கத்தரி வெயில் நிறைவடைந்தாலும், அதன் தாக்கம் இரண்டு நாளைக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடுமையான வெயில் தொடர்வதையொட்டி பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயிலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் வாட்டி வதைத்தது. குறிப்பாக, சென்னை, வேலூர் போன்ற முக்கிய நகரங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது.  வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகளும், வயதானவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 


மேலும் வெப்பம் அதிகரிக்க கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,  ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் காரணமாக சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சற்று தாமதமாக பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்தியாவின் ஆர்.எல்.வி டிடி விண்ணில் ஏவப்பட்டது

- Monday, May 23, 2016 No Comments
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் விண்வெளி ஓடம் ஆர்.எல்.வி டிடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் இது முக்கிய மைல்கல்லாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
பொதுவாக, விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறிவிடும். ஆனால் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி ஓடம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பி வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு திரும்பி வரும் விண்வெளி ஓடத்தை மீண்டும் விண்ணில் செலுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து இந்த ஓடம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்வெளி ஓடம் இப்போது முதல்முறையாக தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்பட்டுள்ளது.
இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை சுமார் 10 முறை விண்ணில் ஏவ முடியும். இதனைத் தயாரிப்பதற்கு ரூ.95 கோடி வரை செலவானது.
எனினும், எதிர்காலத்தில் ராக்கெட் தயாரிப்பதற்குப் பதிலாக, இந்த விண்வெளி ஓடத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது 10 மடங்கு அளவுக்கு செலவு குறையும்.
இப்போதைய நிலையில் இதில் செயற்கைக்கோள்களை மட்டுமே செலுத்த முடியும். இதனை மேம்படுத்தும்போது, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் அளவுக்கு மேம்படுத்த முடியும். ராக்கெட்டைப் போல செங்குத்தாக விண்ணை நோக்கி சீறிப்பாயும் இந்த விண்வெளி ஓடம், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
விண்ணில் இருந்து திரும்பி வரும்போது இந்த ஓடம் தரையில் இறங்காது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடத்தை ஏவும் சோதனை 10 நிமிடத்தில் முடிந்துவிடும்.

சோதனையின் போது 45 கிமீ உயரத்துக்கு சென்ற பிறகு அதில் பொருத்தப்பட்டுள்ள "பூஸ்டர்கள்' தனியாகப் பிரிந்து வங்காள விரிகுடாவில் விழும். அதன் பிறகு தொடந்து விண்ணில் பயணிக்கும் ஓடம் 70 கிமீ உயரத்தை எட்டிய பிறகு மீண்டும் பூமிக்குத் திரும்பும். இப்போது செலுத்தப்படும் ஓடம் பரிசோதனைக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால், அதனைக் கடலில் இருந்து மீட்கப்போவதில்லை என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செம்மரக் கடத்தல் கொலை?

- No Comments
ஆந்திர மாநிலத்தின் சேஷாசலம் வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான தங்கள் தரப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி முருகேசன் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் திருப்பதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தச் சென்றார்கள் என்று கூறப்பட்டு, செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் தங்கள் தரப்பு அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி முருகேசனிடம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு புலனாய்வு குழு தற்போது தாக்கல் செய்துள்ள அறிக்கை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த அவர், இந்த வழக்கு நிலுவையில் தான் உள்ளது என்றும், அது தொடர்பான தீவிர நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இருபது தமிழர்களின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசுக்கும் ஆந்திர மாநில அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ஐந்து லட்ச ரூபாயை அளிக்க வேண்டுமெனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்தே இந்த விவகாரத்தின் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஆந்திர மாநில அரசு நியமித்தது.
அந்த புலனாய்வு குழு ஓராண்டு காலமாக மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை தொடர்பான செய்திகள் மீண்டும் புதிய சர்ச்சைகளை உருவாகியுள்ளது.
குறிப்பாக ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினர் மீதான குற்றச்சாற்றுக்கு ஆதாரம் இல்லை என அந்த அறிக்கை கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனங்களையும் வெளியிடப்பட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்த சிக்கலில் பா.ம.க. மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தாலோ அல்லது பா.ம.க. தொடர்ந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்துக் கொண்டிருந்தாலோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும். ஆனால், வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் தான் ஆந்திர அரசுக்கு இந்த அளவு துணிச்சல் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஒரு போலி என்கவுண்டர் நடவடிக்கையே என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர மாநில அரசியல் பிரமுகர் சிந்தா மோகன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
அந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அச்சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்று வந்த சிந்தா மோகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தான் ஒரு மருத்துவர் என்றும் பிரேத பரிசோதனை முதல் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும் தான் அனைத்து சடலங்களையும் பார்த்ததில் ஒரு சடலத்தின் தலையில் மூளை வெளியில் தெறித்து வந்திருந்தது என்றும் அது துப்பாக்கியால் சுடப்பட்டதால் வந்ததல்ல என்றும் அரிவாளால் தலை வெட்டி பிளக்கப்பட்டிருந்தது என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
அப்போது அதற்கு பதிலளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது தவறு என குறிப்பிட்டிருந்தார். மேலும் நாட்டின் இயற்கை வளங்களை பாதுக்காக்கவே முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.