முக்கிய செய்திகள்

ஊட்டி,
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு தெரிவித்து உள்ளார்.
மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். தொடர்ந்து மலர் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை செயலாளர் டாக்டர் விஜயகுமார், எம்.பி.க்கள் கே.ஆர்.அர்ஜூனன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பேசும் போது கூறியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தபோதிலும், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த பூங்காவை கண்டு ரசிக்க கடந்த ஆண்டு மட்டும் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இங்கு தாவரவியல் பாடங்களை படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் வந்து செல்கின்றனர்.
2 ஆயிரம் தாவர இனங்கள் இந்த பூங்கா 22 ஹெக்டேர் பரப்பளவில், கடல்மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 2 ஆயிரம் தாவர இனங்கள் உள்ளன. கடந்த 1896–ம் ஆண்டு முதன்முதலாக மலர்கண்காட்சி நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டது.
கடந்த 1980–ம் ஆண்டு முதல் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இந்த மலர்கண்காட்சியை நடத்தி வருகிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் இன்று (நேற்று) தொடங்கிய கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிக பிரமாண்டமாக 1 லட்சத்து 30 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலைய அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 ஆயிரத்து 500 மலர்களை கொண்டு சிட்டுக்குருவிகள் அலங்காரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேயிலை பூங்கா விழாவில் கலெக்டர் சங்கர் பேசும் போது கூறியதாவது:–
கடந்த 1995–ம் ஆண்டு 100–வது மலர்கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆசியா கண்டத்திலேயே சிறந்த ரோஜா பூங்காவை ஊட்டியில் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் ஊட்டி ரோஜா பூங்கா.
தொடர்ந்து காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா, கூடலூரில் வண்ணத்து பூச்சி பூங்கா உள்ளிட்ட பூங்காக்களும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி நீலகிரியில் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நீலகிரியில் அவர் சுற்றுலாவை மேம்படுத்தி உள்ளார். இந்த இயற்கை காட்சிகள் மற்றும் மலர்களை காண்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சாந்தி ஏ.ராமு, ஆர்.கணேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, வேளாண்மைத்துறை துணை இயக்குனர்கள் உமாராணி, சிவசுப்பிரமணியம், அ.தி.மு.க. மாவட்ட அவை தலைவர் தேனாடு லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வேளாண்மைத்துறை இயக்குனர் சித்ரசேனன் வரவேற்று பேசினார். முடிவில் இணை இயக்குனர் மணி நன்றி கூறினார்.

Tags:

No Comment to " ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் "