முக்கிய செய்திகள்

சென்னை:
தமிழ் நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்து மே 29-ந் தேதி வரை மீன்களின் இனப் பெருக்க காலம் என்பதால் 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருந்தது.இதனால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்த தடை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இன்று நள்ளிரவில் கடலுக்குள் செல்ல உள்ளனர்.கடந்த 1½ மாதங்களாக வருமானம் இன்றி தவித்த நிலையில் மீன்பிடி தடை காலத்தில் உற்பத்தி அதிகரித்து அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்குள் செல்லும் மீனவர்கள் செவ்வாய் அல்லது புதன்கிழமை கரைக்கு திரும்புவார்கள்.இதற்காக காசிமேடு, ராமேசுவரம், தூத்துக்குடி, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், கேன்கள், வலைகள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மீன்பிடி தடை காலம் காரணமாக கடந்த 1 மாதமாக மீன் வரத்து குறைந்திருந்ததால் விலை அதிகமாக இருந்தது. இன்று முதல் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்வதால் மீன் விலை 2 நாளில் குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்திய எல்லையை தாண்டி யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:

No Comment to " மீன்பிடி தடை காலம் முடிந்தது: நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குள் செல்கின்றனர் "