முக்கிய செய்திகள்


சென்னை,
‘‘நான் 10 படங்களில் நடித்து விட்டேன். நிக்கி கல்ராணியைப்போல் ஒரு கலகலப்பான கதாநாயகியை பார்த்தில்லை’’ என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.

விஷ்ணு விஷால்

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘குள்ளநரிக்கூட்டம்,’ ‘நீர்ப்பறவை,’ ‘ஜீவா,’ ‘முண்டாசுப்பட்டி,’ ‘இன்று நேற்று நாளை’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் இவர், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். கதாநாயகனாக நடித்திருப்பதுடன், படத்தை தயாரித்தும் இருக்கிறார். 

இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். எழில் டைரக்டு செய்து இருக்கிறார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது, கதாநாயகன் விஷ்ணு விஷால் கூறியதாவது:-

10-வது படம்
‘‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,’ நான் நடித்துள்ள 10-வது படம். எனக்கு மட்டும்தான் பத்தாவது படம் என்று நினைத்தேன். டைரக்டர் எழில், இசையமைப்பாளர் சத்யா ஆகியோருக்கும் இது 10-வது படம் என்று பின்னர் தெரியவந்தது.

‘நீர்ப்பறவை’ படத்துக்குப்பின், நான் படங்களை தேர்வு செய்துதான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதேபோல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்துதான் நடித்து வருகிறேன். இந்த படத்தை முதலில் வேறு ஒருவர்தான் தயாரிப்பதாக இருந்தார். எதிர்பாராத விதமாக நானே தயாரிப்பாளராக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் நண்பர்கள் உதவியுடன் படத்தை தயாரித்து நடித்து இருக்கிறேன்.

நிக்கி கல்ராணி
நான் இதுவரை நந்திதா, சுனைனா, மியாஜார்ஜ், ஸ்ரீதிவ்யா என பல கதாநாயகிகளுடன் நடித்து விட்டேன். நிக்கி கல்ராணியைப்போல் கலகலப்பான-சுறுசுறுப்பான கதாநாயகியை பார்த்ததில்லை. பயங்கர சுறுசுறுப்பு. லொட லொட என்று பேசிக்கொண்டே இருப்பார். முதல் படத்திலேயே பயமுறுத்திய அவர், பழகுவதற்கு நேர் மாறாக இருந்தார்.
இதுவரை தொடர்ந்து 3 வெற்றி படங்கள் கொடுத்து விட்டேன். தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.’’
இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.

சூரி
நடிகர்கள் சூரி, ரவிமரியா, நடிகை நிக்கி கல்ராணி, டைரக்டர் எழில், இசையமைப்பாளர் சத்யா ஆகியோரும் படத்தை பற்றி நிருபர்கள் மத்தியில் பேசினார்கள்.

Tags:

No Comment to " நிக்கி கல்ராணியைப்போல் கலகலப்பான கதாநாயகியை பார்த்தது இல்லை "