முக்கிய செய்திகள்

கிருஷ்ணராயபுரம் : கரூர் அருகே பாசஞ்சர் ரயில் பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு பக்கத்து பெட்டிக்கு  ஓடி உயிர் தப்பினர். கரூரிலிருந்து  திருச்சிக்கு நேற்று காலை 6.50  மணிக்கு பாசஞ்சர் ரயில் 300 பயணிகளுடன் புறப்பட்டது. 6.55 மணியளவில்  பசுபதிபாளையத்தை தாண்டியபோது ரயிலின் இன்ஜினுக்கு அருகில்  இருந்த பெட்டியின் அடிப்பகுதியில் ஜங்ஷன் பாக்சில் இருந்து திடீரென புகை வர  தொடங்கியது. இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள்  மூச்சுவிட முடியாமல் திணறினர். வீரராக்கியம் நெருங்கியபோது பெட்டியில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அந்த பெட்டியிலிருந்த  15 பயணிகள் அலறி  அடித்துக்கொண்டு அடுத்த பெட்டிக்கு ஓடினர்.  7.05 மணியளவில்  வீரராக்கியம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். தகவல் அறிந்து  தீயணைப்பு வீரர்கள் விரைந்து  வந்து அந்த பெட்டியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.   எனினும் மேல் பகுதியில் இருந்த மின் விசிறி, பயணிகளின்  இருக்கைகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

இதன்பிறகு, கரூரிலிருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு  ரயிலில் பொருத்தப்பட்டது. பின்னர் இன்ஜின்  மெக்கானிக்குகள் ரயிலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, ரயிலை மீண்டும் இயக்கலாம்  என தெரிவித்தனர். இதனால், வீரராக்கியம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.25  மணிக்கு பயணிகள் யாரும் இல்லாமல், திருச்சிக்கு அந்த ரயில் புறப்பட்டு சென்றது. தீயில் சேதமடைந்த  பெட்டி கழற்றப்படாமல், ரயிலுடனே சென்றது.   ரயிலில் வந்த பயணிகள், பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா என்பது பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்தது என்ன? பயணிகள் பேட்டி

தீ விபத்து குறித்து ரயிலில் வந்த பயணி முத்துசாமி கூறுகையில், ‘மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில், புகை வருவது போலவே இருந்தது. தொடர்ந்து, மூச்சடைத்தது. ரயில் வீரராக்கியத்தில் நின்ற பிறகுதான் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது’ என்றார். கனகவள்ளி கூறுகையில், ‘கரூரில் இருந்து ரங்கத்துக்கு செல்ல குடும்பத்துடன் வந்தோம். ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீரென நின்றது. அடுத்தடுத்து பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் சத்தம் போட்டுக் கொண்டே ரயிலை விட்டு இறங்கி ஓடினர். இதனால் நாங்களும் இறங்கி பார்த்தபோதுதான் தீ விபத்து தெரியவந்தது’ என்றார்.

எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு திடீர் தீ


ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலைய, கோச்சிங் யார்டில் பெங்களூருவில் இருந்து வந்த சொர்ணா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் சொர்ணா ரயில் இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பயங்கரமாக எரியத் தொடங்கியது. வீரர்கள் வந்து சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க எரிந்த ரயிலில் உள்ள பெட்டிகளை துண்டித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘இடி, மின்னலால், உயர் அழுத்த மின்கம்பியில் மின்சார கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’ என்றனர். ஆனாலும், இதில் ஏதாவது நாச வேலையாக இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூருக்கு செல்லவேண்டிய சொர்ணா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

Tags:

No Comment to " எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு திடீர் தீ "