முக்கிய செய்திகள்

நாமக்கல்,
கர்நாடகாவில் பறவை காய்ச்சகோழிகளை தாக்கி இருப்பதை தொடர்ந்து நாமக்கல்லில் கால்நடை துறையினர் 45 அதிவிரைவு படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
பறவைக்காய்ச்சல் கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக அனைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்களும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள், கோழிகள், கோழி முட்டைகள், வாத்துகள், வாத்து முட்டைகள், வாத்துக்குஞ்சுகள், கோழித்தீவனங்கள் போன்றவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் பண்ணையின் நுழைவு வாயிலில் கிடங்கு அமைத்து அதில் குளோரின் டைஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைப்பதோடு, உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. கோழிப்பண்ணையினுள் நுழையும் வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னரே, பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
அதிவிரைவு படை மேலும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 45 அதிவிரைவு படை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கோழிப்பண்ணைகளை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் சுமார் 1,100 முட்டையின கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4 கோடிக்கும் மேல் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் மாதந்தோறும் 20 ஆயிரம் ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அது மேலும் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் கோழிகளை தாக்கி உள்ளதால், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டை 20 சதவீதம் வரை குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருங்காலங்களில் முட்டை விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:

No Comment to " கர்நாடகாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்லில் 45 அதிவிரைவு படை அமைத்து கண்காணிப்பு "