முக்கிய செய்திகள்

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் விண்வெளி ஓடம் ஆர்.எல்.வி டிடி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் இது முக்கிய மைல்கல்லாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
பொதுவாக, விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறிவிடும். ஆனால் இப்போது தயாரிக்கப்பட்டுள்ள விண்வெளி ஓடம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு பத்திரமாகத் திரும்பி வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு திரும்பி வரும் விண்வெளி ஓடத்தை மீண்டும் விண்ணில் செலுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து இந்த ஓடம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்வெளி ஓடம் இப்போது முதல்முறையாக தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்பட்டுள்ளது.
இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை சுமார் 10 முறை விண்ணில் ஏவ முடியும். இதனைத் தயாரிப்பதற்கு ரூ.95 கோடி வரை செலவானது.
எனினும், எதிர்காலத்தில் ராக்கெட் தயாரிப்பதற்குப் பதிலாக, இந்த விண்வெளி ஓடத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது 10 மடங்கு அளவுக்கு செலவு குறையும்.
இப்போதைய நிலையில் இதில் செயற்கைக்கோள்களை மட்டுமே செலுத்த முடியும். இதனை மேம்படுத்தும்போது, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் அளவுக்கு மேம்படுத்த முடியும். ராக்கெட்டைப் போல செங்குத்தாக விண்ணை நோக்கி சீறிப்பாயும் இந்த விண்வெளி ஓடம், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
விண்ணில் இருந்து திரும்பி வரும்போது இந்த ஓடம் தரையில் இறங்காது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடத்தை ஏவும் சோதனை 10 நிமிடத்தில் முடிந்துவிடும்.

சோதனையின் போது 45 கிமீ உயரத்துக்கு சென்ற பிறகு அதில் பொருத்தப்பட்டுள்ள "பூஸ்டர்கள்' தனியாகப் பிரிந்து வங்காள விரிகுடாவில் விழும். அதன் பிறகு தொடந்து விண்ணில் பயணிக்கும் ஓடம் 70 கிமீ உயரத்தை எட்டிய பிறகு மீண்டும் பூமிக்குத் திரும்பும். இப்போது செலுத்தப்படும் ஓடம் பரிசோதனைக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால், அதனைக் கடலில் இருந்து மீட்கப்போவதில்லை என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:

No Comment to " இந்தியாவின் ஆர்.எல்.வி டிடி விண்ணில் ஏவப்பட்டது "