முக்கிய செய்திகள்


ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி.

ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார்.

இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன.

மெஸ்ஸியின் 300-வது கோல்:

ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து அதிரடியாக உள்ளே நுழைந்து பந்தை இரண்டு பாதுகாப்பு வீரர்களைக் கடந்து எடுத்துச் சென்று இடது காலால் அபாரமான கோலை அடித்தார். இது அவரது 300-வது கோலாகும். 

அதன் பிறகு 2 நிமிடங்களில் கிஜோன் அணி கோலைத் திருப்பி சமன் செய்தது. ஆனால் இதுவும் நீடிக்கவில்லை மெஸ்ஸி மீண்டும் ஒரு கோலை அடித்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்திலேயே மெஸ்ஸியின் ஹேட்ரிக் கோல் வாய்ப்பை இவான் கியுயெல்லர் தடுத்தார்.

மெஸ்ஸியின் சாதனையையடுத்து, பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் கூறும்போது, “மெஸ்ஸி அணியில் இருப்பது ஒரு சிறப்புரிமை. அவரால் நாங்கள் எந்த நிலையில் இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறோம்” என்று புகழாரம் சூட்டினார்.

Tags:

No Comment to " ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை "