முக்கிய செய்திகள்


கொழும்பு, 
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் மலிங்கா, துணை கேப்டன் மேத்யூஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

20 ஓவர் உலக கோப்பை
6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் மார்ச் 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. முன்னதாக முதலாவது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் வருகிற 24-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக சமீபத்தில் நடந்த இந்திய தொடரில் பங்கேற்காத கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா, துணை கேப்டன் மேத்யூஸ், வேகப்பந்து வீச்சாளர் குலசேகரா ஆகியோர் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி உள்ளனர். இதே போல் இந்திய தொடரில் ஆடாத இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்தும் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

இலங்கை அணி வீரர்கள்
விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா, ஆல்-ரவுண்டர் ஷிகான் ஜெயசூர்யா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்திய தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி வருமாறு:-
மலிங்கா (கேப்டன்), மேத்யூஸ் (துணை கேப்டன்), சன்டிமால், தில்ஷன், நிரோஷன் டிக்வெலா, ஷிகான் ஜெயசூர்யா, மிலின்டா ஸ்ரீவர்த்தனா, தாசுன் ஷனகா, கபுகேதரா, குலசேகரா, சமீரா, திசரா பெரேரா, செனநாயகே, ஹெராத், ஜெப்ரி வான்டர்சே. 
கடைசியாக 2014-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையை மலிங்கா தலைமையிலான இலங்கை அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:

No Comment to " 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியில் மலிங்கா, மேத்யூஸ் "