முக்கிய செய்திகள்


புவுனேஷ்வர் : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 2014ம் ஆண்டு மே 1ம் தேதி பெங்களூரு-கவுகாத்தி காசிரங்கா எக்ஸ்பிரஸில் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் சிமி தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் கைது செய்யப்பட்ட 4 சிமி தீவிரவாதிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு, மே மாதம் 1ம் தேதி காலையில் பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. காலை 5.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடைந்து இருக்க வேண்டிய அந்த ரெயில் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் தாமதமாக 7.05 மணிக்கு வந்து சேர்ந்தது. எனவே அந்த குண்டுவெடிப்பு சென்னையை குறிவைத்து நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.
அந்த குண்டுவெடிப்பில் பெங்களூருவில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுவாதி என்ற 24 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று கொண்டிருந்தபோது, இந்த குண்டுவெடிப்பில் சிக்கி அவர் பலியானார். மேலும் 14 பேர் அதில் படுகாயம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பில் துப்பு துலங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், தடை செய்யப்பட்ட ‘சிமி' இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் மெகபூப், அம்ஜத் கான், ஜாகீர் உசேன், முகமது சலேக் ஆகிய 4 தீவிரவாதிகளும், மெகபூப்பின் தாயார் நஜ்மா பீவியும் ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநில போலீஸ் கூட்டு படையின் அதிரடி வேட்டையில், புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஒடிசா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்ட சிறையில் இருந்து கடந்த 2013ஆம் ஆண்டு தப்பியோடி தலைமறைவாக இருந்த 4 சிமி தீவிரவாதிகள், ஒடிஸா மாநிலம், ரூர்கேலாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றி வளைத்த ஒடிஸா, தெலங்கானா மாநில காவல் துறையினர் அதிரடியாக துப்பாக்கியால் சுட்டனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கிய தாக்குதல் புதன்கிழமை அதிகாலை வரை சுமார் 4 மணிநேரத்துக்கு நீடித்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கண்ட்வா மாவட்டச் சிறையில் இருந்து தப்பியோடிய இவர்கள் நால்வரும் தலைமறைவாக இருந்துகொண்டே, மத்தியப் பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழ்நாடு, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) மற்றும் பல்வேறு மாநிலக் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த இந்த சிமி தீவிரவாதிகள், இப்போது ஒடிசாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வாவைச் சேர்ந்த முகமது ஐஜாஜுதீன், அம்ஜத் கான், ஜாகிர் ஹுசைன், மெஹபூப் குட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் 28 முதல் 35 வயது வரை உள்ளவர்கள். தலைக்கு ரூ.10 லட்சம் வெகுமதியாக அறிவிக்கப்பட்டவர்கள் என்று ஒடிஸா டிஜிபி கே.பி.சிங் கூறினார்.
முதல் கட்டமாக ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவன், "சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் எனக்கும், எனது கூட்டாளியான முகமது ஐஜாஜுதீனுக்கும் தொடர்பு உண்டு. நாங்கள் தான் அதைத் திட்டமிட்டு அரங்கேற்றினோம் என ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
ஜாகீர் உசேனின் கூட்டாளியான இந்த ஐஜாஜூதீன், சிமி 2யின் மற்றொரு தீவிரவாதியான முகமது அஸ்லாம் என்பவனுடன் தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், ஜானகிபுரத்தில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை ஒடிசா உளவுப்படை சிறப்பு இயக்குனர் அருண் குமார் சாரங்கி உறுதிபடுத்தியுள்ளார்.





Tags:

No Comment to " சென்னை சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்புக்கு சிமி பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு "