முக்கிய செய்திகள்


மும்பை, 

காலிஸ் போன்று மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று இந்திய இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய வரவு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர்களில் மொத்தம் 6 ஆட்டங்களில் விளையாடினார். போதிய பேட்டிங் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இலங்கைக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் 12 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன்கள் விரட்டி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். ஆசிய கோப்பை மற்றும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த 22 வயதான ஹர்திக் பாண்ட்யா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர். கிராமத்தில் 400 ரூபாய்க்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடியவர் இப்போது கோடீஸ்வரர் ஆகி விட்டார். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

திருப்பம் தந்த ஐ.பி.எல்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனை ஆகும். ஒரு ஆண்டுக்கு முன்பு வரை ஹர்திக் பாண்ட்யா என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது குறைந்தது, ஹர்திக் பாண்ட்யா ஒரு ஆல்-ரவுண்டர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுகிறார், தற்சமயம் இந்திய அணிக்காகவும் விளையாடுகிறார் என்பதை மக்கள் அறிவார்கள். கடந்த ஆண்டு ‘ரோலர் கோஸ்டர்’ மாதிரி எனது கிரிக்கெட் பயணம் ஏற்றமும், இறக்கமும் கொண்டதாக இருந்தது. ஓராண்டுக்குள் வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டதும், முகேஷ் அம்பானி என்னை அழைத்து, உன்னை எங்கள் அணிக்கு தேர்வு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், எது தேவை என்றாலும் அதை செய்து கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் சொன்னார். இதே போல் அவரது மனைவி, மகன் ஆகியோரும் என்னை ஊக்கப்படுத்தினர். உலகின் மிகப்பெரிய செல்வாக்குமிக்க குடும்பமான அம்பானி குடும்பத்தினர் இவ்வளவு நெருக்கமாக பேசி உற்சாகப்படுத்தியது உண்மையிலேயே வியப்பு அளித்தது.

ஆரம்பத்தில் பொருளாதார பிரச்சினை காரணமாக என்ன செய்யலாம் என்று குழப்பினேன். இறுதியில் இனி கிரிக்கெட் தான் வாழ்க்கையில் எல்லாம் என்ற முடிவுக்கு வந்து, அதில் தீவிர கவனம் செலுத்தினேன். சில ஆண்டுகள் எனது பயிற்சியாளர் ஜிதேந்திரசிங்குடன் இணைந்து இரவு-பகல் என்று பாராமல் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டேன். காலை 7 மணிக்கு வந்து விட்டால் மாலையில் தான் வீடு திரும்புவேன். இந்த கடின உழைப்பும், பயிற்சியாளரின் வழிகாட்டுதலும் தான் எனது முன்னேற்றத்துக்கு காரணம்.


இந்தியாவின் ‘காலிஸ்’

தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜேக் காலிஸ் எனது முன்மாதிரி. அவரை போன்று ஆக வேண்டும் என்று அடிக்கடி சொல்வேன். ஏனெனில் அவர் தென்ஆப்பிரிக்க அணிக்காக நினைவு கூரத்தக்க வகையிலான சாதனைகளை படைத்துள்ளார். பந்து வீசும் போது முறையான வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்டிங் செய்யும்போது நேர்த்தியான பேட்ஸ்மேனாகவும், பீல்டிங்கின் போது திறமைமிக்க பீல்டராகவும் ஜொலித்தார். அதனால் தான் அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டேன். ‘இந்தியாவின் காலிஸ்’ ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் இந்திய அணிக்காக முத்திரை பதிக்க வேண்டும்.

இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார். 

Tags:

No Comment to " காலிஸ் போன்று ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் "