முக்கிய செய்திகள்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே, சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 7.9 ஆக பதிவானது. அந்த நாட்டின் சில பகுதிகளுக்கு, 'சுனாமி' எச்சரிக்கை விடப்பட்டதால், மக்கள், பீதி அடைந்தனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், சுமத்ரா தீவை மையமாக வைத்து, கடலுக்கடியில், 10 கி.மீ., ஆழத்தில், நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 7.9 ஆக பதிவானது.அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி மையம் இதை உறுதி செய்தது. நில நடுக்கத்தை தொடர்ந்து, இந்தோனேஷிய அரசு நிர்வாகம், மேற்கு மற்றும் வடக்கு சுமத்ரா கரையோர பகுதிகளுக்கு, சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இதனால், மக்களிடையே பீதி ஏற்பட்டது. பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.நில நடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், சுமத்ரா பகுதி மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, திறந்த வீதிகளில் கூடினர். சாலைகளில் ஏராளமானோர் கூடியதால், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது; தொலைபேசி சேவையும் கடுமையாக துண்டிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு ஆபத்தில்லை: 'இந்த நில நடுக்கத்தால், இந்திய கடலோர பகுதிகளுக்கு சுனாமி ஆபத்து இல்லை' என, இந்திய நிலவியல் துறை அதிகாரிகள் அறிவித்தனர். 'இலங்கைக்கும் ஆபத்து இல்லை' என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், ஆஸ்திரேலிய அரசு, தங்கள் நாட்டில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு மட்டும், சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

Tags:

No Comment to " இந்தியாவுக்கு ஆபத்தில்லை : சுமத்ரா தீவு அருகே சக்தி வாய்ந்த நில நடுக்கம் "