முக்கிய செய்திகள்


'ஹே ராம்' படத்தில் இளையராஜாவின் இசை ஓர் ஆராய்ச்சி படிப்புக்கான மையக் கருவாக அமையும் அளவுக்கு வல்லமை மிக்கது என்று கமல்ஹாசன் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
2000ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி கமல்ஹாசன் இயக்கி, தயாரித்த படம் 'ஹே ராம்'. கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமா மாலினி, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் கமல் ரசிகர்கள் #16YearsOfHeyRam என்ற ஹெஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து வந்தார்கள். தற்போது ட்விட்டர் தளத்தில் இணைந்திருக்கும் கமல்ஹாசனும் 'ஹேராம்' படம் பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
"'ஹேராம்' 16-வது ஆண்டு வெற்றியை என் ரசிகர்கள் கொண்டாடுவது என்னை நெகிழ வைக்கிறது. இத்தருணத்தில் இந்த வெற்றிக்கு காரணமான அனைவரையும் நினைவு கூர்கிறேன். குறிப்பாக ஷாருக்கான், பரத் ஷா, மற்றும் மோகன் கோகலேவை நினைவில் நிறுத்துகிறேன்.
அப்யாங்கர் கதாபாத்திரத்தை என் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு செதுக்கினேன். பின்னர் அதை மீண்டும் அதுல்கேவை வைத்து படமாக்கினேன். அவருக்கு தேசிய விருது கிடைத்தது. கோகலேவுக்கு என் மனமார்ந்த நன்றி.
ஒரு நாள் மோகன் கோகலேவின் திறனை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்ட விரும்புகிறேன். அவர் மறைவதற்கு ஒரு நாள் முன்னதாக அவரிடம் சொன்னேன், 'இந்த கதாபாத்திரத்தை தாங்கியதற்காக உங்களுக்கு நிறைய விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது' என்று.
படத்தின் 90% பணிகள் நிறைவடைந்த வேளையில் அவர் இறந்தார். மோகன் கோகலேவை அவ்வளவு நேசித்தேன். ’ஹே ராம்’ படத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சி அப்படத்துக்கான இசை. இளையராஜாவின் அந்த இசை ஓர் ஆராய்ச்சி படிப்புக்கான கருவை கொண்டதாகும்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்

Tags:

No Comment to " இளையராஜாவின் 'ஹே ராம்' இசை ஓர் ஆய்வுப் படிப்புக்குரிய வல்லமை மிக்கது: கமல் புகழாரம் "