தேர்வில் காப்பி அடித்து ஏமாற்றுவதைத் தவிர்ப்பதற்காக தேர்வு எழுத வந்தவர்கள் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக ராணுவ தளபதி தல்பீர் சிங் விளக்களிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிஹார் மாநிலம் முசாபர்நகரில் ராணுவ ஆளெடுப்புக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வில் காப்பி அடித்து ஏமாற்றுவதைத் தவிர்ப்பதற்காக தேர்வு எழுத வந்தவர்கள் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்டனர்.
இது குறித்து முசாபர்நகர் ராணுவ மண்டல அலுவலக இயக்குநர் கலோனல் கோதாரா தெரிவிக்கும் போது, "தேர்வில் கலந்து கொண்டவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடித்தோம். நாங்கள் யாரையும் கொடுமைப்படுத்தவில்லை, அவமதிக்கவில்லை. தேர்வில் கலந்து கொண்டவர்களே இது தொடர்பாக எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைக்காதபோது, வெளியில் இருப்பவர்கள் சிலர் இதில் பிரச்சினை செய்வது ஏன்" என்றார்.
விளக்கம் கோரிய பாரிக்கர்:
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ராணுவ தளபதி தல்பீர் சிங்கிடம் விளக்கம் கோரியுள்ளார். ஆனால், பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து அப்படி எந்த தொடர்பும் இதுவரை வரவில்லை என ராணுவம் மறுத்துள்ளது.
பொதுநல வழக்கு:
இதற்கிடையில், தேர்வு எழுத வந்தவர்கள் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் தீனு குமார், தி இந்துவுக்கு ஆங்கில நாளிதழ் அளித்த பேட்டியில், "ராணுவ அதிகாரிகள் மனிதநேயத்துக்கு அப்பாற்பட்ட கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் 21, 38 எஃப் ஆகியனவற்றின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை ராணுவ அதிகாரிகள் மீறியுள்ளனர். எனது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, 4 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 5-ல் நடைபெறுகிறது" என்றார்.