முக்கிய செய்திகள்

விசாகப்பட்டினம்,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய தனது கடைசி லீக்கில் புனே அணி கடைசி பந்தில் சிக்சர் விளாசி பஞ்சாப்பை வீழ்த்தியதுடன் புள்ளி பட்டியலில் 7–வது இடத்தையும் பிடித்தது.
விஜய் அரைசதம் 9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று மாலை நடந்த 53–வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்–கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. கேப்டன் எம்.விஜய் 59 ரன்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), குர்கீரத்சிங் 51 ரன்களும், அம்லா 30 ரன்களும் எடுத்தனர்.
புனே தரப்பில் ஆர்.அஸ்வின் 4 விக்கெட்டுகளும், அசோக் திண்டா, திசரா பெரேரா, ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் 13 ஆட்டங்களில் வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து தடுமாறிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்த மோதலில் கைப்பற்றிய 4 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.பி.எல். போட்டியில் 100 விக்கெட் மைல்கல்லை தொட்டார்.
ஒரே ஓவரில் 23 ரன் தொடர்ந்து ஆடிய புனே அணியில் ரஹானே 19 ரன்னிலும், ஜார்ஜ் பெய்லி 9 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 30 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரன்தேவை அதிகமானதால் நெருக்கடியும் உருவானது.
மிடில் வரிசையில் கேப்டன் டோனி அணியை மீட்க போராடினார். கடைசி ஓவரில் புனே அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் வீசினார். முதல் பந்தில் டோனி ரன் எடுக்கவில்லை. 2–வது பந்து வைடாக வீசப்பட்டதால் உதிரியாக ஒரு ரன் வந்தது. மீண்டும் வீசப்பட்ட 2–வது பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். 3–வது பந்தில் ஓரிரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் அதை டோனி செய்யவில்லை. பின்னர் 4–வது பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்த டோனி 5–வது பந்தை சிக்சருக்கு ஓட விட்டார். இதையடுத்து கடைசி பந்தில் புனேயின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. இந்த பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டு கலக்கிய டோனி இந்த சீசனை வெற்றிகரமாக முடித்து வைத்தார். உப்பு சப்பில்லாத ஆட்டம் என்ற போதிலும் டோனியின் விசுவரூபம், ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தது.
புனே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 64 ரன்களுடன் (32 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.
புனே அணிக்கு இது 5–வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் 7–வது இடத்தை பிடித்தது. 10 தோல்விகளுடன் பஞ்சாப் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
ராசியில்லையா? முதல் 8 ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக டோனி செயல்பட்டார். இரண்டு முறை சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதுடன், எல்லா முறையும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற மகத்தான சாதனையையும் படைத்தது. சூதாட்ட பிரச்சினையில் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் டோனி, அறிமுக அணியான புனே சூப்பர் ஜெயன்ட்சுக்கு மாறினார். அதிர்ஷ்டகார கேப்டனான டோனிக்கு இந்த சீசனில் எதுவும் கைகொடுக்கவில்லை. ஸ்டீவன் சுமித், கெவின் பீட்டர்சன், பாப் டு பிளிஸ்சிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயத்தால் விலகியதால் பின்னடைவை சந்தித்த புனே அணியால் கடைசி வரை மீள முடியாமல் போய் விட்டது.

Tags:

No Comment to " கடைசி பந்தில் சிக்சர் விளாசி புனே அணி வெற்றி பஞ்சாப்பை வீழ்த்தி 7–வது இடத்தை பிடித்தது "