முக்கிய செய்திகள்


ராய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு ராய்ப்பூரில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்து ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பை தக்க வைத்தது. இதில் ஐதராபாத் நிர்ணயித்த 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 20–வது ஓவரை வீசிய புவனேஸ்வர்குமார் முதல் 4 பந்துகளில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆனால் கடைசி இரு பந்துகளை டெல்லி வீரர் கருண் நாயர் அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டியடித்து அசத்த, டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து திரில் வெற்றியை ருசித்தது. கருண் நாயர் 83 ரன்களுடன் (59 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.
தோல்விக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கருண் நாயர் (51 ரன்னில் இருந்த போது) கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை தவற விட்டேன். தோல்விக்கு நானே பொறுப்பு. வாய்ப்புகளை நழுவ விடும் போது, அதற்குரிய விளைவை அனுபவித்து தான் ஆக வேண்டும். கருண் நாயரின் ஆட்டம் அற்புதமாக இருந்தது’ என்றார்.
ஆட்டநாயகன் விருதை பெற்ற டெல்லி வீரர் கருண் நாயர் கூறும் போது, ‘மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனது சிறந்த இன்னிங்ஸ் இது தான். எல்லாவற்றுக்கும் மேலாக அணியை வெற்றி பெற வைத்திருப்பது மனநிறைவை தருகிறது. எல்லைக்கோடு தூரம் அதிகமாக இருந்ததால், இந்த மைதானத்தில் பவுண்டரிகள் அடிக்க மிகவும் கடினமாக இருந்தது’ என்றார்

Tags:

No Comment to " டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ‘மோசமான பீல்டிங்கால் தோல்வி’ ஐதராபாத் கேப்டன் வார்னர் சொல்கிறார் "