திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க, உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். உண்டியலில் அவர்கள் செலுத்தும் காணிக்கை மூலம், தங்க நகைகள் மட்டுமே, ஆண்டுக்கு ஆயிரம் கிலோ வரை சேர்ந்து வருகிறது.
இதுவரை சேர்ந்த காணிக்கைகளில் இருந்து 5,300 கிலோ தங்க நகைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் எஸ்பிஐ, இந்தியன் ஓவர்சீஸ், பஞ்சாப் நேஷனல் உள்ளிட்ட அரசு வங்கிகளில் ஏழுமலையான் கணக்கில் சேமித்து வருகிறது. இதற்கு வட்டியாக வரும் பணமும் தங்கமாக மாற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஏழுமலையான் வங்கி கணக்கில் தொடர்ந்து தங்கம் குவிந்து வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் 1.75 சதவீத வட்டிக்கு, மேலும் 3,700 கிலோ தங்கத்தை பஞ்சாப் நேஷனல் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிக்க முடிவு எடுக்கப்பட் டுள்ளது.
கடந்த 2010-ல் முதன் முறையாக 775 கிலோ தங்க நகைகளை உருக்கி அதை எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. இதற்காக வட்டியாக ஒரு சதவீதம் தங்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்டது.